வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: சனி, 2 ஜனவரி 2016 (16:42 IST)

84 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறைகளில் உள்ள 84 தமிழக மீனவர்களையும் அவர்களது 62 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 


 
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலஅமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், "புத்தாண்டு தினத்தன்றும் இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை பிடித்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
 
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து 29 மீனவர்கள் 3 எந்திரப் படகுகளில் கடந்த 27.12.2015 அன்று மீன்பிடிக்க சென்றனர். அவர்களை 31–
 
ந்தேதி இரவு இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்று திரிகோணமலையில் வைத்துள்ளனர்.
 
இலங்கை கடற்படையின் இந்த செயல் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் தினசரி வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக உள்ளது. எனவே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
அதுபோல 1974, 1976ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி கடல் எல்லையை ஏற்க கூடாது என்று நான் கூறி வருகிறேன். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
 
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க ரூ.1520 கோடியில் சிறப்புத் திட்டம் வரையறுத்துள்ளது பற்றி நான் உங்களிடம் 3–6–2014 மற்றும் 7–8–2015 அன்று கொடுத்த அறிக்கைகளில் தெரிவித்துள்ளேன். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.
 
இலங்கை சிறைகளில் ஏற்கனவே 55 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பருவமழையில் நனைந்து சேதமாகி விட்டன.
 
அப்பாவி தமிழக மீனவர்கள் பண்டிகை நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் இல்லாமல் தவிக்க நேரிட்டுள்ளது துரதிர்ஷ்டமாகும். அவர்களது வாழ்வாதாரத்தை விரைவில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
 
எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள 84 தமிழக மீனவர்களையும் அவர்களது 62 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.