ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது மிராக்கிள்: சுப்பிரமணியன் சாமி சர்ச்சை கருத்து!
ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது மிராக்கிள்: சுப்பிரமணியன் சாமி சர்ச்சை கருத்து!
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவு திரும்பியது ஒரு மிராக்கிள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விவகாரம் என்றால் அவரது கருத்துக்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும்.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ள கூறி அவரது உடல் நிலை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என குறிப்பால் உணர்த்தினார்.
அடுத்ததாக தமிழகத்தில் அதிமுக அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சுப்பிரமணியன் சாமி. தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஓர் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ஜெயலலிதா பக்தர்கள் மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் ஜெயலலிதா சுயநினைவுக்கு திரும்பியதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் எனவும் அறிந்துள்ளேன். அப்படி நடந்தால் அது மிராக்கிள் என கூறியுள்ளார்.
ஜெயலலிதா தற்போது சுயநினைவுக்கு திரும்பினார் என கூறியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது, அப்படியென்றால் யாருடையை ஆலோசனையின் பேரில் அவரது துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது மிராக்கிள் என அவர் கூறியுள்ளதும் சர்ச்சையாக பேசப்படுகிறது.