வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 8 அக்டோபர் 2014 (17:33 IST)

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் அதிமுக தொண்டர் தீக்குளித்து சாவு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்காததால் வேதனையடைந்த அதிமுக தொண்டர் ஒருவர், தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கபட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை கண்டித்தும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
 
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனமுடைந்த அதிமுகவினர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ந்து வருகின்றன. இதுவரை 80க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கோவையில் நேற்று ஒருவர் தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
 
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக விசுவாசியான கோபால், ஜெயலலிதாவுக்கு நேற்றைய விசாரணையின் போது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் வேதனையடைந்துள்ளார். எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அதிமுக மாவட்ட அலுவலகத்துக்கு சென்ற கோபால், முதலில் ஜாமீன் கிடைத்தது என வெளியான தகவலையடுத்து உற்சாகத்தில் மிதந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் ஜாமீன் மறுக்கப்பட்டது என செய்தி வெளியானதும் அதிர்ச்சியடைந்தார்.
 
இதையடுத்து தன் வீட்டுக்கு சென்ற கோபால், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட உறவினர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.