திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 10 மே 2016 (11:03 IST)

லஞ்சத்தில் பங்கு தரவில்லை என ஜெயலலிதா அமைச்சர்களை மாற்றினாரா? - எழுத்தாளர் சு.வெங்கடேசன் கேள்வி

அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினார்கள் என்று மாற்றினார்களா? இல்லை. வாங்கிய லஞ்சத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று மாற்றினார்களா? என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
 

 
திண்டுக்கல்லில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணி சார்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய சு.வெங்கடேசன், “இந்தியாவில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக ஆக்கியிருப்பதாக ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். இந்தியாவில் 110 விதியின் கீழ் 181 அறிக்கைகள் எங்குமே படிக்கப்பட்டது இல்லை; தமிழக சட்டமன்றத்தில் மட்டும்தான் படிக்கப்பட்டது.
 
ஆனால் அறிவித்த அறிவிப்பைத் தவிர ஒரு வேலையும் நடைபெறவில்லை. எல்லா முதலமைச்சர்களுக்கும் இல்லாத சிறப்புத் தகுதி ஜெயலலிதாவுக்கு உண்டு. அது என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளில் தன்னுடைய வீட்டைத்தவிர தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் கால் பதிக்காத ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான்.
 
ஒன்று சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்து வீடு, மற்றொன்று கொடநாட்டில் இருக்கிற வீடு. இந்த இரண்டு இடத்தை தவிர அரசு விழாவுக்கோ, கட்சி விழாவுக்கோ என எங்கும் ஒரு முறை கூட செல்லவில்லை.‘தானே’ புயல் வந்து கடலூரையே திருப்பிப் போட்டது. அவர் எட்டிக்கூட பார்க்கவில்லை.
 
சென்னையைச் சுற்றியுள்ள 6 மாவட்டங்களில் வெள்ளம் வந்து மக்கள் தத்தளித்த போதும் செல்லவில்லை. தான் வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் மட்டும் 2 நிமிடம் சென்று பார்த்தவர் தான் ஜெயலலிதா. 5 ஆண்டுகளில் 29 முறை அமைச்சரவை மாற்றம் செய்தவரும் ஜெயலலிதா தான். 29 முறை ஏன் மாற்றினார்கள் என்று கடைசி வரை சொல்லவில்லை.
 
இந்த அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினார்கள் என்று மாற்றினார்களா? இல்லை. வாங்கிய லஞ்சத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று மாற்றினார்களா? மதுவிற்பனையில் தமிழகத்திற்கு வருடத்திற்கு ரூ. 23 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மொத்த மது விற்பனையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்து தமிழக மக்களை கொள்ளையடித்து வருகின்றன.
 
ஆனால் அரசியலில் எலியும் பூனையும் போல காட்டிக்கொள்வார்கள். இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு ஆட்சியிலும் இலக்கு வைத்து விற்பனை செய்கிறார்கள். டாஸ்மாக்கில் புகார் செய்ய டோல் ஃபிரீ நம்பர் (இலவச அழைப்பு எண்) அறிவித்த மாநிலம் தமிழகம் தான். டாஸ்மாக் சரக்கில் கலப்படம் இருக்கிறது; போதை வரவில்லை என்று ஒருவர் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 10581 என்ற எண்ணிற்கு புகார் செய்யலாம். அந்த எண்ணிற்கு புகார் செய்ய கட்டணம் இல்லை.
 
ஆனால் பள்ளிகளில் நடைபெறும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த டோல்ஃபிரீ போன் இல்லை. நடவடிக்கை இல்லை. இப்படி ஒரு அரசு மீண்டும் தமிழகத்திற்கு வர வேண்டுமா? ஒருவன் தொடர்ந்து 10 ஆண்டுகள் குடிபோதைக்கு அடிமையானால் அவனால் 50 ஆண்டுகளுக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. சிந்திக்க முடியாது.
 
அப்படிப்பட்ட போதை இளைஞர்களை உருவாக்கி வைத்துள்ளன திமுக மற்றும் அதிமுக கட்சிகள். பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், “தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் போதை மாஃபியா கும்பல் வந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கிறார்” என்று கூறியுள்ளார்.