செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (18:19 IST)

உரிய மரியாதையுடன் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட வேண்டும் : பிரதமருக்கு ஜெ. கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்த பெரும் போற்றுதலுக்கு உரிய புலவர் திருவள்ளுவரின் உருவச் சிலையை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் நிறுவுவது தொடர்பாக எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.


 


திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக்கரையில் நிறுவதற்காக பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி மேல்சபை உறுப்பினர் தருண் விஜய் முன்மொழிந்து, அதற்கான நிதி திரட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

திருவள்ளுவர் சிலையின் கங்கை பயணத்தை கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தருண் விஜய் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு கட்சிப் பாகுபாடில்லாமல் பல்வேறு கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர்.

திருவள்ளுவர் சிலையின் கங்கை பயணம் சென்னையை வந்தடைந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா சென்னையில் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி  கொடியசைத்து சிலையை வழியனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி, எனது உத்தரவின் பேரில் அமைச்சரவையின் 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

திருவள்ளுவர் அறிவுறுத்திய, சமுதாயத்தில் நிலவும் பாரபட்சத்தை போக்கவேண்டும்; மக்கள் சமத்துவமாக வாழவேண்டும், என்ற சமூகநீதி தத்துவத்தை வடமாநிலத்தவரும் ஏற்றுக்கொண்டனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் நடத்தப்பட்டது.

ஆனால் ஹர்கிபவ்ரி-ல் சிலையை நிறுவுவதற்கு உள்ளூர்வாசிகள் சிலர் பிரச்னைகளில் ஈடுபட்டதால், ஹரித்வாரில் உள்ள சங்கராசாரியா சவுக்-ல் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி சிலை நிறுவப்பட்டதாகவும், அதை உத்தரகண்ட் கவர்னர் மற்றும் முதல்-மந்திரி கடந்த மாதம் 29-ந் தேதி திறந்து வைத்திருக்கவேண்டும் என்றும் தெரியவருகிறது.

திருவள்ளுவர் சிலையை நிறுவுவதில் உள்ளூரில் உள்ள சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்ததால், உத்தரப்பிரதேசம் மற்றும் மேகாலய கவர்னர்கள் மற்றும் பலர் முன்னிலையில் அந்த சிலை டேம் கோத்ரி விருந்தினர் மாளிகை அருகே தற்காலிகமாக நிறுவப்பட்டது.

ஆனால் தற்போது திருவள்ளுவர் சிலை ஹரித்வார் டேம் கோத்ரி விருந்தினர் மாளிகையில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையை இங்குள்ள தொலைக்காட்சியில் காட்டப்பட்டப்பட்ட போது தமிழர்களின் உணர்வுகளையும் ஆத்திரத்தையும் மூட்டியது.

இந்த விவகாரத்தை உத்தரகாண்ட் அரசுக்கு நீங்கள் உடனடியாக எடுத்துச் சொல்லவேண்டும். திருவள்ளுவர் சிலை உரிய மரியாதையுடன் மீண்டும் குறிப்பிட்ட அந்த இடத்தில் விரைவில் நிறுவப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

இப்படி செய்யத் தவறினால், வடஇந்தியாவின் யாத்ரிகர் தலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவவேண்டும் என்ற நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்துவிடும். இந்தப் பிரச்சினைக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து, இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று உத்தரகண்ட் அரசுக்கு உரிய அறிவுரை வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.