ஜெயலலிதா என் மகனை விடுதலை செய்வார் : அற்புதம்மாள் நம்பிக்கை


Murugan| Last Modified ஞாயிறு, 12 ஜூன் 2016 (20:36 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடி வரும் தனது மகன் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் விடுதலை செய்வார் என்று தான் நம்புவதாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 
பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்து கொண்டார். இந்த பேரணி  கோட்டை வரை சென்று முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்படுகிறது.
 
இந்த பேரணி இன்று பிற்பகல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் இருந்து புறப்பட்டது. அந்த பேரணியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் தியாகு, சத்யாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
பேரணி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் “ என் மகன் ஏற்கனவே பாதி நோயாளி ஆகிவிட்டார்.  எனவே அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவரையும்,  மற்றவர்களையும் அவர் விடுதலை செய்ய வேண்டும். 
 
அவர் அதை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் மகன் ஒவ்வொரு நொடியும் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். நான் கொடுத்த மனுவை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை முதல்வர் ஜெயலலிதா பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று அவர் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :