1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 3 மே 2017 (10:40 IST)

ஜெயலலிதாவின் நகைகள் ஆத்தூரில் விற்பனை? - போலீசார் விசாரணை

ஜெ.விற்கு சொந்தமான கொடநாட்டு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தங்க மற்றும் வைர நகைகள் சேலம் மாவட்டம் ஆத்தூரில் விற்பனை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.


 

 
ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓம் பகதூர் என்பவர் கூலிப்படையால் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். மேலும், ஜெ.வின் கைக்கடிகாரங்கள், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போனதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த கொலையின் மூளையாக செயல்பட்ட கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருக்கு உதவியாக இருந்த சயன் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். இவர் கூலிப்படைகளை வைத்து இந்த சம்பவத்தை செய்துள்ளார். ஜெயலலிதாவின் அறை கதவை உடைத்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 200 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. 
 
ஆனால் ஜெயலலிதா அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேஸ்கள் இதில் திருடப்பட்டதாகவும், அதில் சொத்து ஆவணங்களும், ஜெயலலிதாவின் உயில் பத்திரங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், உயில் போன்றவற்றை கைப்பற்ற அரசியல் பிரமுகர் யாராவது இதன் பின்னணியில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நகைகள் ஆத்தூரில் உள்ள சில நகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், சில நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள நகைக்கடைகளின் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சில கடைகளில் இருப்புக்கு அதிகமான நகைகள் இருந்தது தெரிய வந்தது. எனவே, அதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி அதிகரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வைத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.