ஜெயலலிதாவின் தாய் உள்ளம்: தமிழர்களுக்கு மேல்முறையீடு செய்ய ரூ.9.50 லட்சம் வழங்க உத்தரவு
ஜெயலலிதாவின் தாய் உள்ளம்: தமிழர்களுக்கு மேல்முறையீடு செய்ய ரூ.9.50 லட்சம் வழங்க உத்தரவு
கத்தார் நாட்டில் தண்டனை பெற்ற 3 தமிழர்கள் மேல்முறையீடு செய்ய ரூ.9.50 லட்சம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்த மூன்று தமிழர்கள் அங்கு ஒரு பெண்மணியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அதன் காரணமாக, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவர்கள் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோர் குற்றவாளிகள் என கத்தார் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும், சிவக்குமார் அரசனுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியும் கத்தார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி தெரிய வந்தவுடன், இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மூன்று தமிழர்களை சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர். வழக்கறிஞர்கள், கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவரங்களை கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தமிழக அரசிற்கு தெரிவித்து மூன்று தமிழர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் எடுத்துச் சென்று வழக்காடுவதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
உலகில் எந்த ஒரு இடத்திலும் உள்ள தமிழர் துயரை துடைப்பதில் முன் நிற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்திட உத்தரவிட்டார்.