1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (07:31 IST)

பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் ஜெயலலிதா தயங்க கூடாது: ராமதாஸ்

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக பிரதமரை நேரில் சந்திக்க வேண்டுமெனில் அதையும் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா தயங்க கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பொருத்தவரை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியும், திமுக வும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தன.
 
இப்போது பாரதீய ஜனதா கட்சியும், அதிமுக வும் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை தடுக்கும் வகையில் கடந்த காலங்களில் எத்தனையோ அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் பிறப்பிக்க எந்த தடையும் இல்லை.
 
மத்திய அரசு நினைத்திருந்தால் இதற்கான சட்டத்தை எப்போதோ நிறைவேற்றியிருக்கலாம்; இப்போது கூட அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
 
தமிழகத்தின் சார்பில் அசாதாரணமான அழுத்தம் கொடுக்காத பட்சத்தில் இது சாத்தியமில்லை. எனவே, அனைத்துக் கட்சி ஆதரவுடன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசரச் சட்டத்தை பிறப்பிக்கச் செய்ய தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
 
இதற்காக பிரதமரை நேரில் சந்திக்க வேண்டுமெனில் அதையும் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா தயங்க கூடாது. இவ்வாறு அந்அ அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.