1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:26 IST)

மொட்டை அடித்த பெண்கள் : ஈஷா மீது பெற்றோர்கள் பகீர் குற்றச்சாட்டு (வீடியோ)

தங்கள் பெண்களை மூளைச்சலவை செய்து இப்படி சன்னியாசி ஆக்கிவிட்டார்கள் என்று ஈஷா யோகா மையத்தின் மீது, இரு இளம்பெண்களின் பெற்றோர்கள் புகார் கூறியுள்ள நிலையில், தாங்கள் விரும்பிதான் சன்னியாசி ஆனோம் என்று அந்த பெண்கள் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தங்களுடைய இரண்டு மகள்களான கீதா, லதா ஆகியோரை கோவை வெளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையம், மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கிவிட்டது எனவும், அவர்களை மீட்டுத்தரவேண்டும் எனவும் கோவையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த திங்கட் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
 
இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சன்னியாசம் ஏற்றுக் கொண்ட கீதா,லதா ஆகியோர் பேசும் வீடியோவை ஈஷா மையம் வெளியிட்டுள்ளது. அதில் “ நாங்கள் 7 வருடமாக இங்கு இருக்கிறோம். அது எங்கள் பெற்றோருக்கும் தெரியும். எங்களை அடிக்கடி வந்து சந்தித்து செல்வார்கள். எங்களுடன் அமர்ந்து உணவு அருந்துவார்கள். இப்போது திடீரெனெ ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. பல வருடங்கள் காத்திருந்தான் எங்களுக்கு இந்த சன்னியாசம் கிடைத்துள்ளது. இதை விரும்பித்தான் ஏற்றுக் கொண்டுள்ளோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்த அவர்களின் பெற்றோர்கள் “ ஈஷா யோக மையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு சன்னியாசி ஆக்கப்படுகிறார்கள். நாங்கள் எங்கள் மகள்களை சந்திக்கும் போதெல்லாம் எங்களுடன் வந்துவிடுவதாகத்தான் அவர்கள் கூறினர். தற்போது இப்படி பேசுவதற்கு அவர்கள் நிர்பந்தம் செய்துள்ளார்கள். இப்போது அவர்களை சந்திக்கவும் முடியவில்லை. 
 
ஈஷா மையத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள், தீர்த்தங்கள் ஆகியவற்றை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும், அங்கு நடைபெறும் பல்வேறு மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறியுள்ளனர்.
 

நன்றி : சன் நியூஸ்