1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:12 IST)

இந்தியாவை மாத்துவேன்னு சொன்னது இதைத்தானா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டல்!

Mk Stalin Modi
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் மத்திய அரசின் முடிவு குறித்து தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.



இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் எதிர் கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதிலிருந்து ‘இந்தியா’ என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் ஜி 20 மாநாட்டிற்கான குடியரசு தலைவரின் அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெற்றுள்ளது. பாரத் என்ற ஹேஷ்டேகுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பெயர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!” என்று கூறி #IndiaStaysIndia (இந்தியா இந்தியாவாகவே இருக்கும்) என்ற ஹேஷ்டேகை பகிர்ந்துள்ளார்.

Edit by Prasanth.K