1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (14:52 IST)

இதுதான் அம்மாவிற்கான இலக்கணமா? - மயிலை பாலு கேள்வி

தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தமிழக மக்களின் இயல்பான குணம். இதற்காகவே கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் வைத்தார்கள். சாலையோர குடியிருப்புகளில் நீர் மோர் வார்த்தார்கள்.
 

 
ஆனால் தமிழக மக்களின் தாய் என தாமாக பட்டம் சூட்டிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களே தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் நான்குபேரை சாகடித்திருக்கிறீர்களே. இது என்ன நியாயம்? இது என்ன தாயுள்ளம்?
 
உங்களின் கால் மண்ணில் பதியாது. ஹெலிகாப்டரில் பறந்து வந்து மேடைக்கு அருகிலேயே இறங்கிக்கொள்வீர்கள். உங்களின் உடல் வெப்பம் தாங்காது. மேடையைச் சுற்றி 10ஏசி பெட்டிகள் வைத்து குளிராக்கிக் கொள்வீர்கள்.
 
6 மணிக்கு மேல் இருட்டிய பிறகு ஹெலிகாப்டர் வானில் பறக்க அனுமதி இல்லை என்பதற்காகவே சுட்டெரிக்கும் வெயிலில் உச்சந்தலை எரிய, கால்கள் கொப்பளிக்க நாங்கள் நிறுத்தப்படுகிறோம். தாயுள்ளம் கொண்ட நீங்கள் எங்களை தரித்திரம் பிடித்தவர்களாகவே ஏன் வைத்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. நாங்கள் கொஞ்சமாவது வளர்ந்து விட்டால் அற்பக் காசையும் அரைபிளேட் பிரியாணியையும் காட்டி உங்களின் வளர்ப்புகளால் எங்களைக் கூட்டிவந்து ஆட்டு மந்தைகள் போல் அடைக்கமுடியுமா?
 
வெயில் கொடுமை தாங்க முடியவில்லை. வெளியே போகிறோம் என்றால் காவல்துறை அதிகாரிகளும் கரைவேட்டி எடுபிடிகளும் கண்களாலேயே உருட்டி மிரட்டுகிறார்கள். அம்மா வருவதற்குள் போனால் அவ்வளவுதான் என்கிறார்கள்.
 
அவ்வளவுதான் என்பதற்கான அர்த்தம் தெரிந்து அச்சப்படுகிறோம். அஞ்சி அஞ்சி சாகவேண்டும் என்பதுதானே அம்மாவாகிய நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். மண்டையைப் பிளக்கும் வெயிலில் வேர்வையில் நனைந்து நாக்கு வறண்டு போகும் என்பது கூட அம்மாவுக்கு தெரியாதா?
 
விருத்தாசலத்தில் இரண்டுபேர் செத்த பிறகாவது உங்களுக்கு உறைத்திருக்க வேண்டாமா? சேலத்தில் இரண்டு பேரை சாகவிட்டிருக்கிறீர்கள் என்றால் அம்மா என்பதெல்லாம் சும்மா என்பதைத்தானே நிரூபித்திருக்கிறது.
 
அன்றைக்கு மழை வெள்ளத்தால் மக்கள் தவித்தபோது யாராவது வந்து அச்சம் போக்க மாட்டர்களா என்று காத்திருந்தபோது நேரில் வரமுடியாத அம்மா நீங்கள். தொலை அலைபேசிகளுக்கு இணைப்பு சரியாக கிடைக்காதபோதும் இணைய தள இணைப்பு அரை குறையாக இருந்தபோதும் வாட்ஸ்ஆப்பில் பேசி எங்களிடமிருந்து விலகியே இருந்தீர்கள்.
 
இப்போதும் அப்படியே ஓட்டுகேட்டுவிட்டுப் போகலாம். இதைச்செய்தேன் அதைச் செய்தேன் என்று மாவட்டங்கள் தோறும் பட்டியலிடுகிறீர்கள். அவையெல்லாம் முழுமையாக முடிந்து விட்டதா? அரைகுறையாக நிற்கிறதா என்பதுகூட உங்களுக்குத் தெரியாது.
 
ஏனென்றால் நீங்கள் நேரில் வந்ததும் இல்லை. பார்த்ததும் இல்லை. நான்கு சுவர்களுக்கு நடுவிலிருந்து பொம்மைகளாக வைக்கப்பட்டதைக் காணொளிக் காட்சியிலேயே திறந்து வைத்தீர்கள். ஓட்டும் அப்படியே கேட்டுவிட்டுப்போகலாமே!நாங்கள் வெயிலில் வெந்து சாவதாவது மிஞ்சுமே அம்மா!
 
-மயிலைபாலு [பொறுப்பாசிரியர், தீக்கதிர் நாளிதழ்]
 
நன்றி : தீக்கதிர்