1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (00:35 IST)

‘நெருக்கடி என தெரிந்தும் ஆளுநர் சென்னை வராமல் கிளம்பிச் சென்றது நியாயமில்லை’

நெருக்கடி நிலவுகிறது என்று தெரிந்தும் சென்னை வராமல் கிளம்பிச் சென்றதும், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தள்ளிப் போடுவதுமான ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.


 

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 10வெள்ளியன்று சென்னையில் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி.,தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ”தமிழகத்தில் ஓர் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. தற்போது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை, காபந்து முதல்வர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலை, தமிழகத்துக்கென தனியான ஆளுநரும் இல்லை; அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கும் நிலை.

இதற்கிடையே ஆட்சி அதிகாரத்தையும், கட்சியின் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கான போட்டி முனைப்பாக நடக்கிறது. அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் விருப்பம் என்றாலும், முதல்வராவதற்கு சசிகலா காட்டும் அவசரம், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வரவுள்ள நிலையில் அவசரமாக பதவி ஏற்க முயற்சிப்பது தார்மீக அடிப்படையில் சரியல்ல என்ற கருத்து நியாயமானதே. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் இதற்கு முன் எவ்விதப் பொறுப்பையும் வகிக்காதவர், குறுகிய காலத்தில் இரண்டிலும் பொறுப்புக்கு வர விழைவது இயல்பாகவே ஏற்புத் தன்மையை உருவாக்கவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் உள்ள நெருக்கடியான சூழலில் மத்திய அரசு என்கிற அதிகாரத்தையும் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. ஒரு புறம் தமிழக நலனை வஞ்சித்துக் கொண்டே, மறுபுறம் முக்கியமான தென் மாநிலமான இங்கு கால் ஊன்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பரியமான சமூக நீதி, மதச்சார்பின்மையைப் பின்னுக்குத் தள்ளி, மதவெறி அரசியலை முன்னுக்கு நிறுத்தும் இதன் அபாயத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

இச்சூழலில், அரசியல் சட்ட நடைமுறைப்படி ஆளுநர் நடந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலவுகிறது என்று தெரிந்தும் சென்னை வராமல் கிளம்பிச் சென்றதும், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தள்ளிப் போடுவதுமான ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை மத்திய பாஜக அரசு, தம் அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் காங்கிரசும் இதே அணுகுமுறையைப் பின்பற்றியது. தற்போது, தமிழகத்திலும் அவ்வாறே காய் நகர்த்தப்படுகிறது.

எனவே காலத்தை மேலும் நீட்டிக்காமல், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை சட்டமன்ற வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கிற நடவடிக்கையை உடனடியாக ஆளுநர் மேற்கொண்டு, ஜனநாயக நெறிமுறைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.