1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (23:26 IST)

இந்திய ஆயில் நிறுவனத்தை ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முன் அறிவிப்பின்றி கேஸ் இணைப்பு துண்டித்த இந்திய ஆயில் நிறுவனத்தை ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் மகன் கந்தசாமி, அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றியவர். இவர் ருக்மணி கேஸ் ஏஜென்சியில் கடந்த 2004 ஆம் ஆண்டு கேஸ் இணைப்பு பெற்றுள்ளார். அந்த ஏஜென்சியில் தடையின்றி கேஸ் பெற்று வந்த அவருக்கு கடந்த 2012 அக்டோபர் மாதம் பதிவு செய்த பிறகும் கேஸ் வழங்கப்படவில்லை.
 
இதையடுத்து கந்தசாமி ருக்மணி கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஸ் வழங்கப்படாததது குறித்து கேட்டுள்ளார். அப்போது வேறு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, கந்தசாமி மாற்றப்பட்ட மங்கை ஏஜென்சிக்கு சென்று கேஸ் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அங்கும் முறையாக பதிலளிக்க வில்லை. 
 
தொடர்ந்து அலைகழிக்கப்பட்ட கந்தசாமி, தனது வழக்கறிஞர் மூலம் இரண்டு ஏஜென்சிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் நோட்டீசை பெற்ற ஏஜென்சிகள் எந்தவித பதிலும் அளிக்க வில்லை. மீண்டும் இரண்டாவது முறை அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு, கேஸ் ஏஜென்சிகள், 2013 மார்ச் மாதம் இந்தியன் ஆயில் நிறுவனம் மேலாளர் ராஜேஸ் உத்தரவின் படியே இணைப்பு மாற்றப்பட்டதாகவும், சேவையை புதுபிக்க வேண்டும் எனவும் பதிலளிக்கப்பட்டது.
 
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு கந்தசாமி, முன் அறிவிப்பின்றி கேஸ் இணைப்பை வேறு ஏஜென்சிக்கு மாற்றியதற்கும், தன்னை தேவையின்றி அலைகழித்தற்காகவும், கேஸ் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் சேவை குறைபாடிற்கும் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு, மனுதாரருக்கு தெரிவிக்காமல் கேஸ் இணைப்பு ஒரு ஏஜென்சியில் இருந்து மற்றொரு  ஏஜென்சிக்கு மாற்றியது விதி மீறல் ஆகும். மனுதாரர் கந்தசாமியை தேவையின்றி கேஸ் ஏஜென்சிகள் அலைகழித்துள்ளனர். 
 
எனவே, சேவை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட கந்தசாமிக்கு ரூ. 3 லட்சத்தை இழப்பீடாக, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இரு கேஸ் ஏஜென்சிகள் சேர்ந்தோ, தனித்தனியாகவோ வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். இவை அனைத்தையும் உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.