1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:42 IST)

தமிழிசை சௌந்தரராஜன்பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த 3 ஆண்டுகளில் ரூ. 2 கோடியே 99 லட்சம் செலவிட்டுள்ளார்!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் தனது ஆளுநர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினமா செய்து தேர்தலில் போட்டியிட்டார்.
 
இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த அசோக் ராஜா துணை நிலை ஆளுநராக இருந்த போது தமிழிசை செலவிட்ட தொகை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை  பொது தகவல் அதிகாரி செந்தில்குமார் பதில் தந்துள்ளார். அதன்படி 
துணைநிலை ஆளுநராக  தமிழிசை இருந்தபோது அவரும், அவரது அரசு விருந்தினர்களுக்கு என்று பூங்கொத்து உணவு மளிகை எரிவாயு உட்பட 2021- 22 ல் ரூ. 90.86 லட்சமும், 2022- 23ல் ரூபாய் 54.19 லட்சமும், 2023- 24 இல் ரூ.91.59 லட்சமும் செலவாகி உள்ளது என்றும் துணைநிலை ஆளுநர் மற்றும் அவரின் அணிவகுப்பு வாகனங்களுக்கு எரிபொருள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2021- 22 இல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவாக ரூபாய் 30.71 லட்சமும் 2022-23ல் ரூபாய் 21. 19 லட்சமும் 2023 -24 ரூபாய் 10. 95 லட்சமும் செலவாகி உள்ளது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் முன்னாள் துணை நிலை ஆளுநர்  தமிழிசைக்கு வந்த பரிசு பொருட்கள் குறித்து தகவல் இச்செயலகத்தில் இல்லை என்றும் அவரின் விமான செலவுக்கு இந்தச் செயலகம் ரூபாய் 21,324 செலவு செய்துள்ளது. அவரின் பிற விமான பயணங்களில் செலவுகளை தெலுங்கானா மாநில அரசு ஏற்றுள்ளது.
 
மொத்தமாக கடந்த 2021- 22இல் ரூபாய் ஒரு கோடியே21 லட்சமும், 2022-23இல் ரூபாய் 75 லட்சத்து 38 ஆயிரம், 2023- 24 இல் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.