1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 மே 2021 (17:21 IST)

என் உயிருள்ள வரையில் அரசியலில்.....கமல்ஹாசன் உருக்கம்

என் உயிருள்ள வரையில் அரசியலில் இருப்பேன் என நடிகர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில் ஒரு தொகுதியிலும் மநீம வெற்றி பெறாத நிலையில், கமல்ஹாசன் தனது சினிமா படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் மற்ற நிர்வாகிகள் ஆலோசனைகளை கமல் ஏற்கவில்லை என்றும், அனைத்திலும் தன்னிச்சையாகவே முடிவெடுத்தார் எனவும் பலர் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து தொடர்ந்து பலர் விலகி வரும் நிலையில் சமீபத்தில் சி.கே.குமரவேலு விலகினார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மாற்றம் என்பது மாறாமல் நிகழும். நேர்மையின் முறையில் மாற்றத்தைத்தேடுவோம். மூச்சுள்ளவரையில் அதன் பாதுகாவலர்களாய் இருப்போம். விதை விழுந்தால் மண்ணைப் பற்றிவிட்டால் விரைவில் காடாகும் நாளை நமதாகும். என்னுயிர் உள்ள வரையில் நான் அரசியலில் இருப்பேன். அரசியலில் இருக்கும் வரை மக்கள் நீதி மையம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் மேலும், தோல்வியை ஆராய்ந்து வெற்றி பாடம் கற்றது நம் சரித்திரம் கண்ட உண்மை எனத் தெரிவித்துள்ளார்.