வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (15:03 IST)

’ஃபேஸ்புக்கில் வெளியிட்டது என்னுடைய கருத்து அல்ல’ - ஜெ.விற்கு ஸ்டாலின் பதிலடி

தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
நேற்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ”கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது ஸ்டாலின் அவரது முகநூல் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 
ஆனால், திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்து, ஸ்டாலினின் இணையதளத்தை பராமரிக்கும் சிலர் இதை வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளித்தது.
 
தற்போது சட்டம் - ஒழுங்கு பற்றி ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்த பதிவுகளும் மற்றவர்களின் கருத்துதானோ என்னவோ?" என்று கூறியிருந்தார். 
 
இது குறித்து இன்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவில், ''தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை மறுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அந்த புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை.
 
ஆகவே அந்த புள்ளிவிவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதல்வர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணினி மூலம் அவர் மாநிலம் முழுவதும் மெய் நிகர் சுற்றுபயணம் (virtual tour) சுற்றுப்பயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
 
மாநிலம் முழுவதும் செல்லும் நமக்கு நாமே பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆகவே என் முகநூல் செய்திகளை முதல்வர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
 
முதல்வரால் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.