ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2023 (10:43 IST)

காமராஜரின் கனவு நினைவாக சாதி மத இனவேறுபாடுகளை கடந்து ஒன்றிணைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

காமராஜரின் கனவை நனவாக்க சாதி், மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
பெருந்தலைவர் காமராஜர், குமரி தந்தை மார்ஷல் நேசமணி, மா.பொ.சிவஞானகிராமணி ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணிஅன்புமணி ராமதாஸ், பாமக பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பேச்சு

காமராஜருக்கு எட்டாக்கனியாக கல்வி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் அவருக்கு இந்தியும், ஆங்கிலமும் நன்றாக அறிந்தவர். அதனால்தான் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பிறக்கும் போதும், வாழும் போதும் இறந்த பிறகும் ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர் காமராஜர். மக்களுக்காகவே அனைத்தையும் செய்தவர் காமராஜர். பிச்சைக்காரன் கையில் கூட திருவோடு இருக்கும். உன் கையில் அதுவுமில்லையே காமராசா என்று சொல்லுவார்கள். ராஜாஜி 6 ஆயிரம் பள்ளிகளை மூடினார். ஆனால் காமராஜரோ பல கல்விக் கூடங்களை திறந்தவர் காமராஜர். இன்று ரயில் தயாரிப்பிற்காகவும், ராணுவ தளவாடங்களுக்காகவும் இந்தியா முழுவதும் பாகங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஆவடியிலும்,ரிலும் தொழிற்சாலைகளை அமைத்த காமராஜர் தான்.

திலகபாமா, பாமக பொருளாளர்

காமராஜருக்குப் பிறகு தொழில் வளர்ச்சி குறைந்து விட்டது. தொழில் வளர்ச்சி குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர் அண்புமணி ராமதாஸ். காமராஜர் செய்த கல்வி வளர்ச்சியை இன்று தங்களுடையது என்று சொல்லி யார் யாரோ லேபிள் ஒட்டிக் கொள்கிறார்கள். நாமும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோடி கோடியாக எடுப்பார்கள். அவரைக் காப்பாற்ற முதலமைச்சரும் செல்வார். சாதி குறித்து பலரும் கீழ்மையாக சொல்லிக் கொண்டிருக்கும்  வேளையில் சாதி குறித்து பெருமை வேண்டும் என சொல்லிக் கொடுப்பவர் தலைவர் அண்புமணி. காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறவர்கள், தேர்தல் நேரத்தில் கையேந்தாமல் இருக்கிறோமா என யோசித்துப் பார்க்க வேண்டும். நேர்மையான தமிழகம், மது இல்லாத தமிழகம் அமைய அனைவரும் பாடுபாட வேண்டும்.

 
முத்துரமேஷ், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர்

மதுரையில் நடைபெற்ற விழாவில் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கலைஞர் கருணாநிதி என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். காமராஜரின் புகழுக்கு அவர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார். அதற்கு கடும் கண்டனங்களை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி போன்றோர் தொடர்ந்து காமராஜரின் புகழை இருட்டிடிப்பு செய்யும் வேலையைச்செய்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் விரைவில் தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சி அகற்றப்படும். தமிழகத்தை அன்புமணி போன்ற தூய்மையான தலைவர்கள் ஆள வேண்டும்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

இன்று தமிழகம் வளர அடித்தளமிட்டவர் கர்மவீரர் காமராஜர். அவர் விதைத்த விதை தான் இன்று வளர்ந்து நிற்கிறது. 1952 ல் வன்னியர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்காது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் 1954 ல் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அவர் ஆட்சி செய்த 9 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் பொன்னான காலம். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க காரணமாக இருந்தவர் காமராஜர். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். மணிமுத்தாறு, வைகை அணை, சாத்தனூர், கீழ்பவானி வாய்க்கால், கே.ஆர்.பி திட்டம், பரம்பிகுளம் ஆழியாறு அணை என 13 பாசன திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். ஆனால் இடையில் 56 ஆண்டு காலம் நடுவில் கொஞ்சம் பக்கம் காணாமல் போய்விட்டது. தமிழ்நாடு நிலப்பரப்பு ஆணையம் கடந்த 45 ஆண்டுகளில் 10 விழுக்காடு விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். காமராஜருக்குப் பிறகு நீர் மேலாண்மை திட்டங்களை மறந்து விட்டனர் அல்லது தெரியவில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் 27 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டு வருகின்றன. காமராஜர் இல்லை என்றால் நான் மருத்துவராக ஆகியிருக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் கூறுவார். காமராஜர் ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. ஆனால் அவர் கனவை நிறைவேற்ற தகுதியான கட்சி பாமக தான்.

குமரி ஆனந்தன் மருத்துவமனையில் இருந்த போது அவரது மகளும், தெலங்கனா ஆளுநருமான தமிழிசையிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். போனை வாங்கிப் பேசிய குமரி ஆனந்தன் 'உங்களால் தான் மதுவிலக்கு கொண்டு வர முடியும்' என்றார். எனக்கு கண்கள் கலங்கி விட்டன.

1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா மக்கள் சென்னையையும், திருத்தணியையும் தங்களோடு இணைக்க வேண்டும் என்று போராடினர். ஆனால் தொடர்ந்து போராடி அந்நகர்களை தமிழ்நாட்டோடு இணைத்தவர் ம.பொ.சி. 1969 ஆம் ஆண்டு மேலவை உறுப்பினராக இருந்த ம.பொ.சியின் கடும் முயற்சியால் தான் தமிழ்நாடு என்ற பெயர் உறுதி செய்யப்பட்டது.  அதைப்போல கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைக்கப் போராடியவர் மார்ஷல் நேசமணி.

காமராஜரின் கனவை நனவாக்க சாதி் மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒண்றினைய வேண்டும். நாடார் சமுதாயம் மட்டுமல்ல, எந்த சமுதாயம் பாதிக்கப்பட்டாலும் முதன் முதலில் குரல் கொடுப்பவர் மருத்துவர் ராமதாஸ். 

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் பற்றி தவறான தகவல் இடம் பெற்றிருந்தபோது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வரிகளை எடுக்க வைத்தவர் டாக்டர் ராமதாஸ்.ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை அறிந்தவன் நான். அதற்கு என்ன தீர்வுகொண்டு வர முடியும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு முடிவுகளை தைரியமாக உறுதியாக எடுத்தோம். தமிழக மக்களின் கனவுகளையும் நாம் நனவாக்க வேண்டும். கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடியாக இருந்த மது வருமானம் இந்தாண்டு 45 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரே ஆண்டில் ஒன்பதாயிரம் கோடி உயரக் காரணம் ஆளும் திமுக ஆட்சி தான். எப்படி மது விற்க வேண்டும் என புதிது புதிதாக ரூம் போட்டு யோசிக்கிறார்கள். சில தொழில்களை செய்வதற்கு குடித்தால் தான் செய்ய முடியும் என்கிறார் அமைச்சர்.56 ஆண்டு காலமாக இருக்கிறீர்கள். கழிவை அகற்ற, சாக்கடையைச் சுத்தப்படுத்த இன்னும் மனிதர்களை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு காரணம் நீங்கள் தான் வெட்கக்கேடு. நீங்கள் மது குடிக்க சொல்லும் நபர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் இக்கேள்வியை கேளுங்கள். தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. காமராஜர், பக்தவச்சலம், அண்ணாவின் கொள்கைகளை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே ஆறு வகையான இட ஒதுக்கீடுகளை பெற்று தந்தவர் மருத்துவர் ராமதாஸ். ரிலையன்ஸ் நிறுவனம் வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர் ராமதாஸ்.காரணம் நாடார் சமூக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தான். காமராஜரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சிலம்பாட்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.