தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, அவர்கள் தமிழகத்தில் அதிகம் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்ததோடு, பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
தோற்றத்தில் வட மாநிலத்தவர்கள் போல் இருப்பதால், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்படுவதில்லை என்றும், மேலும் அவர்கள் ஹிந்தி பேசுவதால், வட இந்தியர்கள் என்று நினைத்து வேலை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில், 29 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஊடுருவல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் திருப்பூர், கோவை பகுதிகளில் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னை அருகே திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் வங்கதேசத்தினர் ஊடுருவி இருப்பது தெரிய வந்ததாகவும், அவர்களை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva