என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் - கமல்ஹாசன்

kamal
Last Modified வெள்ளி, 17 மே 2019 (09:36 IST)
அரவக்குறிச்சியில் நேற்று இரவு நடைபெற்ற கமல்ஹாசனின் கூட்டத்தின்போது மர்ம நபர்கள் சிலர் கல் மற்றும் முட்டைகளை மேடையை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது அவரது கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் அரவக்குறிச்சியில் கமல் பிரச்சாரம் செய்தார். நேற்றைய அவரது பேச்சிலும் அனல் பறந்ததால் கூட்டத்தினர் கைதட்டி அவரது பேச்சை ரசித்தனர். 
 
ஆனால் கமல் பேசி முடித்துவிட்டு மேடையை விட்டு கிளம்பும்போது திடீரென கல் மற்றும் முட்டைகள் மேடையை நோக்கி பறந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
உடனே அந்த மர்ம நபர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் பிடித்து அடிக்க தொடங்கினர். இருப்பினும் தொண்டர்களிடையே ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் ராமச்சந்திரன் என்றும், அவர் தளவாபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் மற்றவர்களை போலீசார் வேண்டுமென்றே தப்பிக்க விட்டுவிட்டதாக சினேகன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையின்போது திடீரென மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாகவும் இது திட்டமிட்ட சதி என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளரகளைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது :
 
’’அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கு மட்டுமல்ல எனது அரசியல் பணியிலும் குறுக்கீடு இருக்கிறது. இந்துக்கள் யார் ? ஆர்.எஸ்.எஸ்.யார் ? என்பதை பிரித்து பார்க்கவேண்டும்.
 
என்னைக் கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். என்னைக் கைது செய்யாமல் இருப்பது நல்லது. சர்ச்சை உருவாகவில்லை; உருவாக்கப்பட்டது. வலையும்,தலையும் கத்தரித்து போட்டால் யாரும்  யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். மேலும், சூலூரில் நான் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்ததிலும் அரசியல் உள்ளது.’’ இவ்வாறு தெரிவித்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :