நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளேன் - விஜய் சேதுபதி
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் 66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. தற்போது, 'நடிகர் விஜய் சேதுபதி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கேரளா, குஜராத், அசாம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடக்கம்.
நேற்றைய வாக்குப்பதிவு முடிவில் கிட்டதட்ட 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் 69.45 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 69.43 வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு கட்டங்களை ஒப்பிடுகையில் நேற்றைய வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 302 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். நடிகர் நடிகர்களும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இதுபற்றி கூறியுள்ளதாவது :
மாற்றம் வேண்டும் என்பது அவசியமானதே, நல்லது நடக்குமென்ற நம்பிக்கையில் நானும் வாக்களித்துவிட்டு இளைஞர்களைப்போல் காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
வரும் மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.