1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (18:11 IST)

நீங்கள் அனுப்பி விட்டீர்கள்; ஏற்றுக்கொள்கிறோம் - வேல்முருகன் ஆதங்கம்

வேறு தலைமையிடம் பேசிக்கொண்டிருந்தால் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அப்படி செய்யவில்லை. நீங்கள் அனுப்பி விட்டீர்கள். ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
 

 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய வேல்முருகன், ”அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொகுதிகள் ஒதுக்குவது குறித்து அம்மாவை சந்தித்துப் பேசுகங்கள் என்றார்கள். சந்திக்கிறேன் என்றேன்.
 
அப்போது அவர்கள் கடிதம் கொடுக்க சொன்னார்கள். கடிதம் கொடுத்தேன். 11 தொகுதி கேட்டு இல்லை என்றார்கள். 9 தொகுதிகள் கேட்டு இல்லை என்றார்கள். 6 தொகுதிகள் கேட்டு இல்லை என்றார்கள். கடைசியாக தமிழகத்தில் 5 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என கேட்டேன். எந்த பதிலும் சொல்லவில்லை.
 
நான் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திடீரென தொலைக்காட்சியில் வேல்முருகன் கட்சிக்கு சீட் இல்லை என்று செய்தி வெளியாகிறது. நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படப்போவதில்லை. 
 
அதிமுக தலைமையிடம் பேசிக்கொண்டே, வேறு தலைமையிடம் பேசிக்கொண்டிருந்தால் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அப்படி செய்யவில்லை. நீங்கள் அனுப்பி விட்டீர்கள். பரவாயில்லை. ஏற்றுக்கொள்கிறோம். இதற்கு முன்பாகவே எங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்திருந்தது. ஆனால் நாங்கள் செல்லவில்லை.
 
நான் அதிமுக தலைமையிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தினேன். 35 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். பாமகவினரால் தாக்கப்பட்டோம். வழக்குகளை சந்தித்தோம். கரடு முரடான பாதையை இப்படி கடந்து போக வேண்டும் என்பது தெரிந்ததுதான்.
 
அதிமுக அமைச்சர்களிடம் எந்த ஒரு நோக்கத்திற்காகவது நான் சந்தித்தேனா. இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனை, இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் பிரச்சனை குறித்துதான் சந்தித்தேன். நான் என்னுடைய சுய லாபத்திற்காக அமைச்சர்களை சந்திக்கவில்லை” என்று கூறியுள்ளார்.