வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 31 மே 2015 (17:33 IST)

ஐ.ஐ.டி.மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து - மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி. சென்னையில் அரங்கேற்றப்பட்டுள்ள சகிப்புத்தன்மையற்ற செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.ஐ.ஐ.டி. வளாகத்தில் செயல்பட்டு வந்த "அம்பேத்கார்-பெரியார் மாணவர் வட்டம்" என்ற அமைப்பின் அங்கீகாரத்தை சமீபத்தில் இந்தக் கல்வி நிறுவனம் ரத்து செய்துள்ளது.
 
இந்த மாணவர் வட்டத்தின் சார்பில் மோடி அரசாங்கத்தை விமர்சித்து ஒரு சிறு புத்தகம் வெளியிட்டதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
 
ஆனால் வெளிவந்துள்ள செய்திகளின் படி பார்த்தால் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாணவர் வட்டத்தின் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே இந்த அங்கீகாரம் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.
 
மத்திய அரசும், கல்வி நிறுவனமும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகும். ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தேவையற்ற முறையில் தலையிடுவதையே இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.
 
சமுதாயத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று நாம் அனைத்து இளைஞர்களையும் ஊக்கப்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற அடக்குமுறைகளும், பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளும் இளைஞர்களிடம் அமைதியின்மையும்,கலகத்தையும் தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
 
எனவே, குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் மதிப்புக் கொடுத்து, அவர்களின் மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மத்திய அரசு பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.