1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 மே 2021 (13:08 IST)

தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் கொரோனா சிகிச்சை! – நடைமுறைகள் என்ன?

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கு அரசே செலவை ஏற்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் அதை எவ்வாறு பெறுவது என விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் முதல் நாளே முக்கியமான 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் செலவை அரசே ஏற்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். இந்த சலுகையை பெற குடும்ப அட்டை, வருமான சான்று, ஆதார் அட்டை ஆகிய சான்றுகளை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு அடையாள அட்டை வழங்கும் மையத்தில் சமர்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

RDPCR கொரோனா பரிசோதனை, தீவிரமில்லாத கொரோனா சிகிச்சை, செயற்கை சுவாச உதவியுடன் கூடிய சிகிச்சை , அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றிற்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சையை தமிழகம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.