வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (21:27 IST)

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? - பாஜக முன்னாள் தலைவர் கேள்வி

வைகோ இதுவரை வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? என விவாதிக்க தயாரா? என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
முன்னதாக மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக திமுக மற்றும் பாஜக மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்துள்ளா சி.பி.ராதாகிருஷ்ணன் ’’வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளும் ஒரு தலைவர்தான் வைகோ.
 
விஜயகாந்தை பாஜக மயக்க பார்த்ததாக கூறும் வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவர் இல்ல திருமண விழாவுக்காக மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுக்க வந்த போது என்ன சொன்னார்.
 
வைகோவிடம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்த மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது என்றார். ஆனால் வைகோ அப்போது திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி என்றார்.
 
அதன் பிறகு 3 நாட்கள் கழித்து பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக திமுக எனது கட்சியை அழிக்கப் பார்க்கிறது என கூறினார்.
 
இந்த 3 நாட்களுக்குள் வைகோவின் நிலை மாறியது எப்படி? அவரது இந்த சிந்தனை வளர்ச்சிக்கு காரணம் என்ன? என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் யாரிடத்திலோ விலைபோய் விட்டதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கூறுகிறேன்.
 
யாரிடத்திலோ பேரத்துக்கு அடிபணிந்து விட்டு இன்று பாஜகவை குற்றம் சாட்டுவதாக நினைத்து விஜயகாந்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முன்னிலைப்படுத்துவதால் வைகோவுக்கு ஏற்பட்டுள்ள பொறாமையின் வெளிப்பாடுதான் அவரது இந்த பேச்சு.
 
தன்னை கொள்கை வீரர் என கூறும் வைகோ திருச்சியில் திமுக கட்அவுட்டில் நின்று விட்டு அதே நேரம் அதிமுகவுடன் தொகுதிகள் பேசி முடித்தார். இது தான் கொள்கையா? வைகோ இதுவரை வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? என விவாதிக்க தயாரா?
 
எப்படி சாகித் அப்ரிடிக்கு இந்த உலக கோப்பை கடைசி இன்னிங்சோ அது போல விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தல் கடைசி இன்னிங்சாக இருக்கும். இந்த தேர்தலோடு விஜயகாந்த் அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டிய வழியை வைகோ காட்டி உள்ளார்.
 
யாருக்கும் விலை போக முடியாத உணர்வுள்ள விஜயகாந்த்தை சூழ்ச்சியால் வைகோ வீழ்த்தி விட்டார். விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்ததால் வைகோ தான் பயன் அடைவார். விஜயகாந்துக்கு எந்த பலனும் கிடையாது” என்று கூறியுள்ளார்.