மகாமகத் திருக்குளம் அருகில் மண்டபம் இடிந்தது; உடனே சீரமைக்க, அரசு உத்தரவு

Annakannan| Last Updated: திங்கள், 3 நவம்பர் 2014 (14:03 IST)
2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள 69 திருக்கோயில்களை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செப்பனிட்டுப் பாதுகாக்கப்படும் எனப் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 12.08.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அறிவித்தார். இதனடிப்படையில், அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த மகாமக திருக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள அருள்மிகு சோடசமகாலிங்கசுவாமி திருக்கோயில்கள் உட்பட 69 திருக்கோயில்களையும் செப்பனிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளன.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மகாமகத் திருக்குள சீரமைப்புப் பணிக்கு 72 இலட்சம் ரூபாய் சுற்றுச்சூழல் துறையிலிருந்து 2014ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். அதனடிப்படையில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அருள்மிகு சோடசமகாலிங்க சுவாமி திருக்கோவில்களை அதாவது மகாமக திருக்குளத்தைச் சுற்றியுள்ள 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களின் சன்னதிகளைச் செப்பனிட 19.38 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது.

இச்சூழ்நிலையில், மகாமகத் திருக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் அருள்மிகு சோடசமகாலிங்க சுவாமி திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு முகுந்தேச்சுவரர் சன்னதியில் உள்ள கருங்கற்களால் கட்டப்பட்ட பதினாறுகால் மண்டபத்தின் மேற்பகுதியில் செங்கற்களால் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்டிருந்த கொடுங்கை அமைப்பு, சனிக்கிழமை (01.11.2014) அன்று காலை சுமார் 9.45 மணி அளவில் இம்மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சுமார் 50 சதுர அடி பரப்பளவில் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்தக் கட்டுமானம் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டதால் தற்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஈரப்பதத்தால் இடிந்து விழுந்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இவ்வரசு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அருள்மிகு சோடசமகாலிங்கசுவாமி திருக்கோயிலின் பதினாறுகால் மண்டபத்தின் கொடுங்கையில் ஏற்பட்ட இடிபாட்டை உடனடியாகப் பழமை மாறாது சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சாரம் கட்டும் பணி தொடங்கப்பட்டு மேற்கண்ட மண்டபத்தின் சேதமுற்ற கொடுங்கை செப்பனிடும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.

மேலும், கும்பகோணம், நடனகோபாலன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஒரு தனிப்பட்ட சமுதாயத்தின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ள ஒரு பொதுத் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் முன்பாக இருந்த மண்டபம் ஒன்றும் ஸ்திரத்தன்மை இழந்து தொடர் மழையின் காரணமாக இடிந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் இவ்வரசு இம்மண்டபத்தையும் சீரமைக்க விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனைத் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :