முகமூடி தான் ஹிந்தி .. அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்: முதல்வர் ஸ்டாலின்..!
முகமூடி தான் ஹிந்தி என்றும், அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம் என்றும், ஹிந்தி எதிர்ப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது என்று திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:
திமுகவுடன் இணைந்து பல கட்சிகள் ஹிந்தி திணிப்பை எதிர்க்கின்றன. தமிழை காத்து நிற்கும் திமுகவுடன் பல கட்சிகள் கைகோர்த்துள்ளன. திமுகவை அரசியல் களத்தில் எப்போதும் எதிர்க்கும் கட்சிகள் கூட, ஹிந்தி திணிப்பு வேண்டாம் எனக் கூறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ஹிந்தியை கற்றுக் கொண்டு ஏற்றுக் கொண்டு வாழ்ந்த பீகார் மக்களின் சொந்த மொழி அழிந்து விட்டது. இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தாய்மொழி இந்தி என கூறப்பட்டாலும், உண்மையில் அங்கு உள்ள அனைத்து மொழிகளும் ஹிந்தி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வட இந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகள் கடந்த நூற்றாண்டில் ஹிந்தி-சமஸ்கிருதம் என்னும் ஆதிக்க மொழிகளால் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், "முகமூடி தான் ஹிந்தி, ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva