செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 12 ஜூலை 2017 (16:15 IST)

நடிகர் சூர்யா, சத்தியராஜ் உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான வழக்கு: தடை விதித்தது நீதிமன்றம்!

நடிகர் சூர்யா, சத்தியராஜ் உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான வழக்கு: தடை விதித்தது நீதிமன்றம்!

நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 முக்கியமான நடிகர்கள் மீது பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


 
 
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஷ்வரி விபச்சார வழக்கில் கைதான பின்னர் அவர் வாக்குமூலம் அளித்ததாக மேலும் சில முக்கியமான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பத்திரிகைகள் அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. ஆனால் ஆதாரம் இல்லாமல் இந்த செய்தியை வெளியிட்டதாக சினிமா துறை கண்டனம் தெரிவித்தது.
 
அதனையொட்டி நடிகர் சங்கம் நடத்திய கண்டனக்கூட்டத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பலர் பத்திரிகையாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசினர். இதனையடுத்து நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீது வழக்கு தொடர்ந்தார் ரிபோரியோ என்ற வழக்கறிஞர்.
 
ஆனால் அந்த வழக்குக்கு நடிகர்கள் உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையைப் பெற்றனர். அந்த இடைக்கால தடை கடந்த மாதத்துடன் காலாவதியானது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் அவர்களை கைது செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 முக்கிய நடிகர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு நிலவி வந்தது. இதனையடுத்து நடிகர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.