சென்னையில் விடிய விடிய கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?
வானிலை ஆய்வு அறிக்கையின் எச்சரிக்கையின் படி, சென்னையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து, சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று நள்ளிரவு இடியுடன் மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இனி வரும் நாட்களிலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது, அடுத்து தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்த போதிலும், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கினாலும், வழக்கம்போல் பள்ளி-கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva