1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (13:47 IST)

டிசம்பரில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி? - பாஜக-வின் திட்டம் என்ன?

தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிடிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 14ம் தேதி, கோவையில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி உள்ளிட்ட 12 முக்கிய துறைகளின் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். மேலும், தெருவில் இறங்கி குப்பைகளையும் கூட்டி அதிரடி காட்டினார்.
 
ஆளுநரின் இந்த நடவடிக்கை தவறானது எனவும், இது மாநில சுயாட்சி உரிமையை பறிப்பதாகவும் ஸ்டாலின் உட்பட பல தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இது சரிதான் என பாஜகவினரும், இதில் தவறு ஏதுமில்லை என அதிமுக அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த கிரண்பேடியை துணை ஆளுநராக நியமித்து, நாராயணசாமி அரசுக்கு தொடர்ந்து மத்திய அரசு குடைச்சல் கொடுத்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதே நிலைப்பாட்டைத்தான் தற்போது தமிழகத்திலும் பாஜக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதனால்தான், பன்வாரிலால் கோவையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணிக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. 


 

 
தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்த கவர்னர் வந்த போது கோவை காந்திபுரம் பளிச் தூய்மையில் இருந்தது. அவர் அள்ளுவதற்காக மட்டும் சில இடங்களில் குப்பை கொட்டப்பட்டு, செட்டப் குப்பைத்தொட்டியும் வைக்கப்பட்டது. அவர் அங்கிருந்த சென்றவுடன், அங்கிருந்த குப்பைத் தொட்டியும் காணாமல் போனது.
 
கன்னியாகுமரியில் அடுத்த ஆய்வை ஆளுநர் மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் தலைமை செயலகத்திற்கும் அவர் விரைவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எடப்பாடி பழனிச்சாமி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். வரும் டிசம்பரில் ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, ஆட்சிக்கு எதிராக ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு என மொத்தம் 3 வழக்குகள் நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரணைக்கு வரவுள்ளன. இதில் தமிழக அரசுக்கு எதிராக அதிரடி தீர்ப்புகள் வெளியாகலாம். எனவே, அதையே காரணம் காட்டி தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை மத்திய அரசு அமுல்படுத்தும் எனத் தெரிகிறது. மேலும், அந்த காரணத்தை ஆளுநர் பயன்படுத்திக்கொண்டால், ஆட்சியை கவிழ்த்தும் கெட்ட பெயர் பாஜகவிற்கு ஏற்படாது என்பதுதான் மத்திய அரசின் திட்டம். 
 
மேலும், சமீபத்தில் சென்னை வந்த மோடி, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் இல்லத் திருமணத்தில் பங்கேற்றார். சோமநாதன் விரைவில் தமிழ்நாட்டு பணிக்கு வர இருக்கிறார். அதேபோல், மத்திய அரசில் பணியாற்றிய ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டு பணிக்கு வர உள்ளார். ஆளுநர் ஆட்சிக்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. 
 
வருகிற டிசம்பர் மாதம் தமிழக அரசியலில் பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.