திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (17:35 IST)

கஜா புயல்: தமிழக அரசை பாராட்டிய கமல்!

கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. 
 
மேலும், பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது.  
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இதில் துயரமான செய்தி என்னெவெனில் கஜா புயல் தாக்குதலால் தமிழகத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் பணிகளுக்கு மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பின்வருமாறு தெரிவித்துள்ளார். இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி.
 
பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மய்யம் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு முன்னர் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறது என பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.