1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (16:49 IST)

தாதுமணல் எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.60 லட்சம் கோடி இழப்பீடு: பாமக ஜி.கே.மணி உயர்நீதிமன்றத்தில் மனு

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோர கிராமங்களில், கடல் மணலில் தாதுப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில், 2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 2.10 மில்லியன் டன் மனோசைட், 2.35 லட்ச டன் தோரியம் ஆகியவை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
 
ஊழல் என்பது சமூகத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், பொது நிர்வாகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பெருமளவில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த அதிகாரிகளுடன், தனி நபர்கள் சிலர் கை கோர்த்துக் கொண்டு மிகப்பெரிய ஊழல்களில் ஈடுபடுகின்றனர். கனிம வள முறைகேட்டின் மூலம் ரூ.5 லட்சம் கோடி அதிகாரிகள், அமைச்சர்களால் சுருட்டப்பட்டுள்ளது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த 2012 மே 19 ஆம் தேதி அறிக்கை அனுப்பியுள்ளார்.
 
அதேபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோர கிராமங்களில், கடல் மணலில் தாதுப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில், 2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 2.10 மில்லியன் டன் மனோசைட், 2.35 லட்ச டன் தோரியம் ஆகியவை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் மின்சாரத்துறையில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. அரசு மின் உற்பத்தி நிலையங்களை செயல்படவிடாமல் தடுத்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகை கொடுத்து, மின்சாரத்தை கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,208 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.900 கோடி சுருட்டப்பட்டுள்ளது.
 
அதேபோல, வீட்டு வசதி வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலும் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. சத்துணவு திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்படும் முட்டையிலும் முறைகேடு நடந்துள்ளது. ரூ.12.31 கோடிக்கு மேல் அரசு பணத்தை அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் சுருட்டியுள்ளனர்.
 
மேலும் டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்து, விற்பனையை ஊக்குவிக்கிறது. இதனால், மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் செய்யும் மிகப்பெரிய ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ரோசய்யாவிடம் கடந்த பிப்ரவரி 17ந் தேதி புகார் மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் புகார் மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கவர்னரின் செயலாளர், தமிழக தலைமை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பாலு ஆஜராகி வாதிட்டார். அதற்கு நீதிபதி, ஒரு மாநில கவர்னருக்கு உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? மாநில கவர்னருக்கு கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று இதுவரை எந்த மாநில உயர் நீதிமன்றமாவது உத்தரவிட்டுள்ளதா? அந்த உத்தரவு தங்களிடம் உள்ளதா? ஒரு மாநில கவர்னருக்கு உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.