1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (12:09 IST)

நிவாரண பொருட்களை கட்டணமில்லாமல் அனுப்பலாம்! தமிழக அரசு அறிவிப்பு...!!

TNSTC
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


 
தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட  4 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருள்களை இலவசமாக அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு நிவாரண உதவி செய்ய விரும்புபவர்கள் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பொருட்களை அனுப்ப முடியும்.