1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சென்னை , வியாழன், 25 ஏப்ரல் 2024 (20:38 IST)

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த 7 கைது!

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன், இவர் தனது நண்பர்களுடன் காரைக்குடி வந்து, நகைக்கடை பஜார் அடகு கடையில் 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.
 
சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ் அப்பகுதி நகை வியாபாரிகளுடன் சேர்ந்து நாச்சியப்பனை பிடித்து வைத்து கொண்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
 
தகவல் அறிந்து வந்த போலீசார் நாச்சியப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது நண்பர்களான சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன், கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜன், காரைக்குடியை சேர்ந்த ராஜகோபால், ராமசாமி மற்றும் பலருடன் சேர்ந்து இது போன்று போலி நகைகளை அடகு வைத்து பல ஊர்களில்,பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
 
உடனடியாக நாச்சியப்பனையும்  அவருடன் வந்த கூட்டாளிகள் ஏழு பேரையும் கைது செய்த போலீஸார்,147 கிராம் போலி நகைகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.