தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
Suresh| Last Updated: திங்கள், 27 அக்டோபர் 2014 (11:18 IST)
வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அடித்தட்டு மக்களுடைய வாழ்வாதாரம் சிதறுண்டுள்ளது.

பிழைப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் தேம்பிக் கிடக்கின்றனர். சென்னையில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையால், தாழ்வான குடியிருப்புகள், குடிசைப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிக் கொண்டிருக்கின்றன.

வெள்ளப் பகுதிகளை ஓரிரு அமைச்சர்களைத் தவிர்த்து, வேறு யாரும் பார்வையிடவில்லை. நிவாரணப் பணிகளிலும் அக்கறை காட்டவில்லை. மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளை அழைத்துப் பேசி, தேவையான வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், மாநில அரசின் சார்பிலே முதல் கட்டமாக வெள்ள நிவாரண நிதி அறிவிக்க வேண்டும். ஓரிரு நாள்களில் அந்த நிதியை ஒதுக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக எவ்வளவு பணம் தரப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

ஒவ்வோர் அமைச்சரையும், ஒவ்வொரு மாவட்டத்துக்கு உடனே அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குவதோடு, அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும்“ என்று அவர் கூறியுள்ளார்.

மேலுதம் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :