1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , வியாழன், 25 ஏப்ரல் 2024 (22:27 IST)

முன் விரோதம் காரணமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் புகார்

சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை அருகே உள்ள அரையனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பால்ராஜ். 
 
தனியார் வாகன ஓட்டுனரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊர் கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடி வரியாக ரூபாய் மூவாயிரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட  ஜான் பால்ராஜ் குடி வரியை செலுத்த முயன்ற போது ஊர் தலைவர் சின்னப்பன் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி குடி வரியை பெற மறுத்துள்ளார்.
 
அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது துணைத் தலைவர் ஜஸ்டின் திரவியம், ஜான் பால்ராஜை தாக்கி காயப்படுத்தியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
காயமடைந்த ஜான் பால்ராஜ் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை நிறைவு பெற்று வீடு திரும்பியுள்ளார்.
 
முன்னதாக சம்பவம் குறித்து தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ள நிலையில், தன் குடும்பத்தாரிடம்  ஊர் மக்கள் பேச மறுப்பதாகவும், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி தனது மனைவி மற்றும் மகள்களுடன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
 
ஏற்கனவே ஊர் தலைவர் சின்னப்பன் மற்றும் துணைத் தலைவர் திரவியத்துடன் முன் விரோதம் காரணமாக தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய ஜான் பால்ராஜ், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.