வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஈரோடு வேலுச்சாமி
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (11:55 IST)

மிதக்கிறது ஈரோடு, மூழ்கிய பாலங்கள், முடங்கிய போக்குவரத்து

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தரைப் பாலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மண் சரிவால் கடம்பூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதித்தது.

 
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழையினாலும் புயல் மழையின் காரணமாகவும் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், கடம்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பகலைக் காட்டிலும் இரவு நேரங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் இருக்கும் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. இது மட்டுமின்றி உபரி தண்ணீர் வன ஓடைகளில் சென்று வருகிறது.

 
கடந்த பதினைந்தாம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது பவானி ஆற்றில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொடிவேரி அணையில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், ஆசனூர், திம்பம், கடம்பூர், குன்றி உள்ளிட்ட பகுதியில் மிக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாகச் சத்தியமங்கலம் வடக்கே உள்ள பெரியகுளம் ஏரி தண்ணீர் நிறைந்து, உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் இப்பகுதியில் மழை நீரால் சாலை பாதிக்கப்பட்டது.

மேலும்
 
 

உபரி தண்ணீர் பெருக்கெடுத்து சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள கீரிப்பள்ளத்தில் ஓடியதால் சத்தியமங்கலத்தில் இருந்து கொடிவேரி செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து பெய்த மழையின் கராணமாகப் பெரும்பள்ளம் மற்றும் குண்டேரிபள்ளம் அணைகள் நிறைந்தன.

 
இந்த அணைகளில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், சத்தியமங்கலம் அருகே உள்ள அத்தியப்பகவுண்டன் புதூர் பள்ளத்தில் தரைப் பாலத்திற்கு மேல் தண்ணீர் ஓடியதால் இந்த வழியாகவும் போக்குவரத்து பாதித்தது.


 
தொடர் மழையின் காரணமாகக் கடம்பூர் மலைப் பகுதியில் பல்வேறு பகுதியில் அருவிகளில் தண்ணீர் கொட்டிய நிலையில் பல இடங்களில் முதன் முறையாக மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் சரிவைச் சீர்செய்த பிறகே இந்த வழியாகப் போக்குவரத்து தொடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், தாசில்தார் சேதுராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செல்வம், பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.