1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (23:35 IST)

மின்சாரக் கொள்முதல்-விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: கருணாநிதி சூசக தகவல்

மின்சாரக் கொள்முதல்-விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: கருணாநிதி சூசக தகவல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மின்சாரக் கொள்முதல் பிரச்சினைக்காக மட்டும் தனியே ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்டும் என தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி-பதில் பாணியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சூரிய சக்தி மின்சார கொள்முதலிலும் தவறு நடந்ததாகக் கூறி நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றிருக்கிறதே?
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் "ராசி கிரீன்" நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகள் தொடுத்திருக்கின்றன.
 
அந்த வழக்குக்கான மனுவில், "எங்கள் நிறுவனங்கள் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விதித்துள்ள நிபந்தனைகளை எங்கள் நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. மின்சாரக் கொள்முதல் தொடர்பாக நாங்கள் கொடுத்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்காமல், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங் களிடமிருந்து சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
 
எனவே இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்"என்று கூறியிருக்கிறார்கள். இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனியார் நிறுவனங்களிடமிருந்து சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
 
இந்தத் தடை உத்தரவை நீக்கக் கோரி தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் 1,500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட் டிருந்தது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம், பொதுமக்கள் நலன் கருதி 1,500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் கொள்முதல் செய்யலாம் என்ற நிபந்தனையுடன் கடந்த மாதம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தார்.ஆனால் சூரிய சக்தி மின்சாரக் கொள்முதலில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி, மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தனியார் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்குகளைத் தற்போது தாக்கல் செய்துள்ளன.
 
இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. மனுதாரர்கள் சார்பில் கழக வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி வாதிட்டிருக்கிறார். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சூரிய சக்தி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் 31 தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட அறிக்கையை, உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இரண்டு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டு மென்று நீதிபதி கூறியிருக்கிறார்.
 
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்த மின்சாரக் கொள்முதல் பிரச்சினைக்காக மட்டும் தனியே ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் போல் செய்திகள் வருகின்றன.
 
அப்போது தான் இந்தத் தவறுக்கெல்லாம் யார் காரணம்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்பதெல்லாம் வெளியே வரும். அதிமுக ஆட்சியில் மின்சாரம் என்றாலே, "அதிர்ச்சி" தான்; மின்சாரக் கொள்முதல் என்றாலே, திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதைதான் என தெரிவித்துள்ளார்.