1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 2 மே 2016 (17:25 IST)

கூட்டணியில் ஈகோ பிரச்சனை?: அதிருப்தியில் விஜயகாந்த், சாமரம் வீசும் வைகோ!

தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் ஈகோ பிரச்சனை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் அந்த கட்சியின் முக்கிய இரு தலைவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூட்டணி கட்சியினருடன் கலந்து ஆலோசிக்காமல் ஒரு சில முடிவுகளை தன் விருப்பத்திற்கு ஏற்ப எடுப்பதால் கூட்டணி கட்சியினர் அவர் மீது ஏகத்துக்கும் கடுப்பாக உள்ளனர். அதிலும் விஜயகாந்த் வைகோ மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக பேசப்படுகிறது.
 
கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என வைகோ அறிவித்தது அந்த கூட்டணியில் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் வைகோ அதனை நிராகரித்துவிட்டார்.
 
இந்நிலையில் வைகோவை சாத்தூர் தொகுதியில் போட்டியிடுமாறு தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் அறிவுறுத்தினார். விஜயகாந்தின் பேச்சையும் அவர் கேட்காமல் அதனையும் நிராகரித்துவிட்டார். தனது பேச்சை வைகோ கேட்காததால் விஜயகாந்த் வைகோ மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் தன் மீது அதிருப்தியில் உள்ள விஜயகாந்தை சமரசம் செய்ய வைகோ வரும் 11-ஆம் தேதி திருச்சியில் கூட்டணியின் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
 
வைகோவின் மீது அதிருப்தியில் உள்ள விஜயகாந்த் வைகோ ஏற்பாடு செய்துள்ள திருச்சி மாநாட்டில் பங்கேற்பது சந்தேகமே என கூறப்படுகிறது.