1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:39 IST)

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!

தேசிய பத்திரிக்கையாளர் தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முதல்வரின் வாழ்த்துச் செய்தி:-

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகை துறையின் பணிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக அரசு, பத்திரிகையாளர்களின் நலனை காக்கும் வகையில், பத்திரிகை துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக 5,000 ரூபாய் வழங்குவது, பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவியை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, பணிக்காலத்தில் காலமான பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவித் தொகையை உயர்த்தி வழங்கியது, பத்திரிகை துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் குறைந்த வாடகையில் வீடுகளை ஒதுக்கீடு செய்வது, மாவட்டங்களில் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்குவது, அரசு அங்கீகார அட்டைகள் பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்வுக்காக சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகை துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.