1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (10:34 IST)

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு: மோத உள்ள இரு துருவங்கள்!

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு: மோத உள்ள இரு துருவங்கள்!

அதிமுகவில் தற்போது டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. வரும் 5-ஆம் தேதி கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தலைமை கழகத்துக்கு வர வேண்டும் என தினகரன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை நடக்க உள்ளது.


 
 
முன்னர் சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் மோதிக்கொண்டது போல தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், தினகரனும் மோத உள்ளனர். அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் தினகரன் ஆகஸ்ட் 5 வரை தான் நான் பொறுத்திருப்பேன், அதன் பின்னர் தீவிரமாக கட்சி பணி ஆற்றி அரசியலில் இறங்குவேன் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், மீண்டும் தான் கட்சி பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். வரும் 5-ஆம் தேதி தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த கடிதமும் எழுதியுள்ளார்.
 
தினகரன் கட்சி அலுவலகத்தில் நுழைந்தால் நிலமை தலை கீழாக மாறிவிடும் என எடப்பாடி தரப்பு அஞ்சுகிறது. எனவே தினகரனை கட்சி அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுக்க முயற்சி செய்து வருகிறது எடப்பாடி தரப்பு. தினகரனின் இந்த விஸ்வரூபத்தை அடக்கினால் தான் கட்சி நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என நினைக்கிறது எடப்பாடி தரப்பு.
 
இந்நிலையில் தினகரனை எப்படி எதிர்கொள்ளலாம். அவரை கட்சி அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுப்பது எப்படி என்ற ஆலோசனையில் இருங்கியுள்ள எடப்பாடி தரப்பு, இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார்.
 
இந்த கூட்டத்தில் முக்கியமாக ஓபிஎஸ் அணியை எந்த வாக்குறுதி அளித்தாவது கட்சியில் இணைத்து தினகரனுக்கு நெருக்கடி கொடுக்க அலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் தினகரன் தரப்பும் சும்மா இருக்காது. 5-ஆம் தேதி தினகரன் கட்சி அலுவலகத்தில் நுழைந்தால் எடப்பாடி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நிச்சயம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.