1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (14:01 IST)

ஜெயலலிதா எதிர்த்த ஜெயேந்திரரிடம் ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி!

ஜெயலலிதா எதிர்த்த ஜெயேந்திரரிடம் ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சங்கர்ராமன் கொலை வழக்கில் காஞ்சி ஜெயேந்திரரை ஜெயலலிதா அரசு கைதுசெய்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர் அதிமுகவுக்கும் சங்கர மடத்துக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டது.


 
 
ஆனால் அவர் இல்லாத சூழலில் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி காஞ்சி ஜெயேந்திரரை திட்டமிட்டு சந்தித்து அவரிடம் ஆசிபெற்றுள்ளார். ஜெயலலிதா இல்லாத நிலையில் மத்திய அரசின் உதவிகளைப்பெற சங்கர மடத்தின் ஆசீர்வாதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவை என்பதால் இந்த சந்திப்பு நடந்ததாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறையில் உள்ள காவிரி புஷ்கர திருவிழாவில் கலந்துகொண்டு துலா ஆலயம் அருகில் பாயும் காவிரியில் புனித நீராடினார். அதன் பின்னர் துலா ஆலயத்தில் காஞ்சி ஜெயேந்திரர் விழா நூலை வெளியிட அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டு ஜெயேந்திரரிடம் ஆசிபெற்றார்.
 
இந்த சந்திப்பை நடத்த கடந்த ஒரு மாத காலமாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கடி சங்கராச்சாரியார்களைச் சந்தித்து ஏற்பாடுகளைச் செய்துவந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இல்லாத சூழலில் அவர் எதிர்த்த ஒருவரை தற்போது உள்ள அவரது வழியில் செயல்படுவதாக கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆசிபெற்றது அதிமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.