வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (13:10 IST)

சிவாஜிக்கு என்ன நடந்ததோ அதுதான் இவர்களுக்கும்! – எடப்பாடியார் காட்டம்!

திரை நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த உள்ளாட்சி தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி பணிகள் நிமித்தம் சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினிகாந்த் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கூறியது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் “வெற்றிடம் இருக்கிறதென்றால் இத்தனை நாள் ரஜினி எங்கிருந்தார்? சினிமாவில் வாய்ப்பு குறையும்போது நடிகர்கள் அரசியல் நோக்கி வந்துவிடுகிறார்கள். தமிழகத்தின் மிகப்பெரிய நடிகர் சிவாஜிக்கு அரசியலில் என்ன நிலை ஏற்பட்டதோ அதுதான் மற்ற நடிகர்களுக்கும் நடக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் குறித்து கேட்கப்பட்ட போதும் கமலுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என கேள்வியெழுப்பினார் முதல்வர். நடிப்பு உலகில் சக்ரவர்த்தியாக திகழ்ந்த சிவாஜி கணேசன் திமுகவிலிருந்து விலகிய பிறகு 1988ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அவரால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியாத நிலையால் அந்த கட்சி காணாமல் போனது. அதை சுட்டிக்காட்டிதான் முதல்வர் ரஜினியையும், கமலையும் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.