1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (16:18 IST)

ஆட்சியை கலைத்து விடுவேன் - கோபத்தில் கொந்தளித்த எடப்பாடி?

அதிமுக துணைப் பொதுச்செயலார் டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்று சந்தித்து வருவதும், சில அமைச்சர்கள் அவருக்கு அவருக்கு ஆதரவாக பேசி வருவதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.


 

 
சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தால்தான் இரு அணிகளும் இணையும் என ஓபிஎஸ் அணி கூறியதையடுத்து, இனிமேல் அவர்கள் கட்சி பணியில் ஈடுபடமாட்டார்கள், அவர்களை ஒதுக்கி வைக்கிறோம் என எடப்பாடி அணி தெரிவித்தது. ஆனாலும், அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வருவோம் என ஓபிஎஸ் அணி கறார் காட்டி வருவதால் இரு அணிகளுக்கும் இடையே இன்னும் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருக்கிறது. 
 
இந்நிலையில்தான், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட, அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். 
 
அதன் பின் அவரை தொடர்ச்சியாக 32 அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் ஓபிஎஸ் அணியோடு இணைவதற்கு முட்டுக்கட்டை போடும் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், இது பாஜகவிடம் தனது பலத்தை காட்டுவதற்கான தினகரனின் முயற்சி என்பதையும், எது நடந்தாலும் ஆட்சியை கலைக்கும் வேலையில் தினகரன் ஈடுபடமாட்டார் என்பதை நன்கு உணர்ந்த எடப்பாடி தரப்பு அமைதி காத்து வந்தது. 
 
அதனால்தான், தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பதை பொருட்படுத்த வேண்டாம் என முதல்வரின் செய்தி தொடர்பாளர் போல் செயல்பட்டு வரும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
 
அந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி “நான் உட்பட கட்சியில் பலரும் சசிகலா குடும்பத்தால் முன்னேறியவர்கள்தான். எனக்கு நேரம் இல்லாததால் தினகரனை சந்திக்க முடியவில்லை” என கூறினார். அவரின் இந்த பேட்டி எடப்பாடி பழனிச்சாமியை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றதாம். 
 
என்ன நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசி வருகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் நினைத்தால் ஆட்சியை கலைத்து விடுவேன். என் தயவில்தான் ஆட்சி எந்தவித சிக்கலும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசும் அமைச்சர்கள் பதவிகளை பறித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தால் முதல்வருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களின் பதவியையே பறித்துவிடுவேன். எனவே, அவர்களை அமைதியாக இருக்க சொல்லுங்கள். இல்லையெனில் விளைவு விபரீதமாகிவிடும்” என கோபத்தில் கொந்தளித்தார் என செய்திகள் வெளியாகியுள்ளது.