சிதம்பரம் கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அல்ல.. விசிகவுக்கு ராமதாஸ் ஆதரவு..!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க முடியாது,” என்றும் இதே போல், மற்ற கோவில்களிலும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும், கோவில்கள் கிரிக்கெட் மைதானம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தீட்சதர்கள் கிரிக்கெட் விளையாடியதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார். “வேண்டுமென்றால் தீட்சதர்கள் தனியாக கிரிக்கெட் விளையாடுவதற்கு என ஒரு மைதானத்தை அரசின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். தீட்சதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்ற விளம்பர பலகையை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில், கோவில்களில் விளையாடுவதை அனுமதிக்க முடியாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பக்கம் தீட்சதர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.