திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (14:58 IST)

வரதட்சனை கொடுமை செய்து 4 பேரை தற்கொலைக்கு உட்படுத்திய அரசு ஊழியர் கைது

நாகை மாவட்டத்தையே அதிர்ச்சிக்குளாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்களை தற்கொலை முடிவுக்கு உட்படுத்திய அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவரது மனைவி குணசுந்தரி (50). கண்ணன் தம்பதியினருக்கு சரண்யா (22) மற்றும் சுகன்யா (20) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். கண்ணன் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகள் சரண்யாவுக்கும், மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. விக்னேஸ்வரன், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புள்ளியியல் துறையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகி சில நாட்களிலே விக்னேஸ்வரன் சரண்யாவிடம் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக சரண்யா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் சரண்யா வீட்டிற்கு சென்ற விக்னேஸ்வரன், சரண்யாவையும் அவரது வீட்டாரையும் கடுமையாக பேசியுள்ளார்.
 
இதனால் மனமுடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் விக்னேஸ்வரன் அவரது மனைவி சரண்யாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி, சரண்யாவின் குடும்பத்தாரை தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் பெண் வன்கொடுமை, வரதட்சணை தடுப்பு, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர். விக்னேஸ்வரனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.