வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (16:39 IST)

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை நடுரோட்டில் மறிக்க கூடாது: புதிய உத்தரவு

போக்குவரத்து காவல் துறையினர், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் நடு ரோட்டில் மறிக்க கூடாது என்று உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


நேற்று திங்கட்கிழமை [07-11-16] மாலை, களங்கரை விளக்கம் அருகே சில போக்குவரத்து காவல் துறையினர், இரண்டு சக்கர வாகணங்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை குறி வைத்து தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த வழியாக இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த ஒரு போலீசார் முயன்றார்.

அப்போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் அவர்கள் கீழே விழுந்தனர். இதில் இரு வாலிபர்களும் பலத்த காயமடைந்தனர். மேலும், அந்த காவலருக்கும் காலில் அடிபட்டது. படுகாயமடைந்த வாலிபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அங்கு கூடிய பொதுமக்களும், வாலிபர்களும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், இதுபோன்ற சோதனையின் போது போக்குவரத்து காவல் துறையினர், நடுரோட்டில் நின்றபடியே மோட்டார் சைக்கிளை மறிப்பதால் விபத்துகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதனையடுத்து, இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் நடு ரோட்டில் மறிக்க கூடாது என்று உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.