ரோடு போட்டு தறீங்களா.. இல்ல தற்கொலை பண்ணிக்கவா? – நிதின் கட்கரியை மிரட்டிய கதிர் ஆனந்த்!
மக்களவை தேர்தலுக்காக வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தான் குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்க அமைச்சருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்ததாக பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் கதிர் ஆனந்த். திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மகன்தான் இவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் வேலூரில் நின்று வெற்றிபெற்ற கதிர் ஆனந்த், இந்த தேர்தலிலும் வேலூரில் போட்டியிடும் நிலையில் வாக்குசேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறாக குடியாத்தம் பகுதியில் பேசிய அவர் “கடந்த முறை நான் எம்.பி தேர்தலுக்கு நின்றபோது இந்த குடியாத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு புறவழிச்சாலை அமைத்து தருவேன் என கூறினேன். நான் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றபோது தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் நிதிநிலையை காரணம் காட்டி புறவழிச்சாலை அமைக்க மறுத்து வந்தார்கள்.
ஒருநாள் நான் நாடாளுமன்ற கூட்டத்திலேயே வைத்து மத்திய அமைச்சரிடம் நீங்கள் புறவழிச்சாலை அமைத்து தருகிறீர்களா? அல்லது நான் தற்கொலை செய்துகொள்ளட்டுமா? கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொன்னேன்.
அதற்கு பின் என் பிறந்தநாள் அன்று எனக்கு போன் செய்து வாழ்த்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எனக்கு பிறந்தநாள் பரிசாக நான் கோரிக்கை விடுத்து வந்த குடியாத்தம் புறவழிச்சாலையை அமைத்து தருவதாக சொன்னார்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K