செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2016 (12:29 IST)

’ஜெ. சொல்வதை கேட்டு எப்படி முட்டிக் கொண்டு அழுவது?’ - ஸ்டாலின் விமர்சனம்

சொல்லாததையும் செய்திருக்கிறேன்”, என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு விட்டு நாம் எங்கு, எப்படி முட்டிக் கொண்டு அழுவது என்றே தெரியவில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சூலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஎம்சி மனோகரன் அவர்களை ஆதரித்து பேசிய மு.க. ஸ்டாலின், “ஜெயலலிதா போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வருவார்கள். உங்கள் குறைகளை, பிரச்சினைகளை என்றாவது ஒரு நாளாவது ஜெயலலிதா நேரில் வந்து கேட்டது உண்டா? இந்த மாவட்டத்திற்கு வந்தது உண்டா? இந்த தொகுதிக்கு வந்தது உண்டா? எந்த மாவட்டத்திற்கும் வந்தது இல்லை.
 
ஆனால் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் அடிக்கடி வருவார். அது நீலகிரி மாவட்டம். அதுவும் ஒய்வு எடுப்பதற்காக.
 
கடந்த 5 வருடத்தில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி போய் உள்ளது. அப்படி பின்னோக்கி போய் உள்ள தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமானால் கலைஞர் 6 -வது முறையாக ஆட்சிக்கு வந்தாக வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்.
 
கொடநாட்டில் 900 ஏக்கர் வாங்கியதைப் போல மேலும் பல ஆயிரம் ஏக்கர்களை வாங்கும் அளவுக்கு இன்னொரு வாய்ப்பை நீங்கள் வழங்கக் கூடாது. சசிகலா குடும்பத்தினர் இன்று தமிழகத்தையே கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். வேளச்சேரியில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜாய்ஸ் சினிமா தியேட்டர்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள்.
 
ஆக இத்தனை திட்டங்களும் இங்கு உறுதியாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலையில் ஜெயலலிதா இன்றைக்கு, “நான் சொன்னதெல்லாம் செய்து விட்டேன்”, என்று சொல்கிறார். அதுகூட பரவாயில்லை, “சொல்லாததையும் செய்திருக்கிறேன்”, என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு விட்டு நாம் எங்கு, எப்படி முட்டிக் கொண்டு அழுவது என்றே தெரியவில்லை. அப்படி அவர் சொல்லாததை செய்தது எதையென்றால்,
 
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, சந்து, பொந்தெல்லாம் டாஸ்மாக் கடை திறப்பேன் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் செய்து விட்டார். இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால், செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கிறேன் என்று சொல்லவேயில்லை, ஆனால் திறந்து விட்டு விட்டார். அதனால் எத்தனை பேர் உயிரை இழந்தார்கள், உடைமைகளை இழந்தார்கள் என்று உங்களுக்கே தெரியும்.
 
அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட ஒரு நல்ல வாய்ப்பு மே -16ம் தேதி வருகிறது. அதனை பயன்படுத்தி கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.