மதிமுக-வை திட்டமிட்டு ஸ்டாலின் உடைக்க நினைக்கிறார் : வைகோ ஆவேசம்


Murugan| Last Modified வியாழன், 17 டிசம்பர் 2015 (11:26 IST)
திமுக பொருளாலர் ஸ்டாலின், மதிமுகவை திட்டமிட்டு உடைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளிதத்த வைகோ “மக்கள் நல கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மதிமுக கட்சியினரை எங்களிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்கள். கலைஞர் கருணாநிதிக்கு இது தெரிந்து நடக்கிறா என்று எனக்கு தெரியவில்லை.
 
10 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் தன் பேரன் திருமணத்தில் கலந்து கொள்ளும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். அங்கு நான் சென்றபோது எங்களுக்குள் உணர்ச்சிபூர்வமான சந்திப்பு நடந்தது. அதன் அடிப்படையில் புதிய கூட்டணியை உருவாக்க திமுக விரும்பியது. அதில் தவறில்லை. ஆனால் திமுகவோடு கூட்டணி வைப்பதால் ஏற்படும் சாதக-பாதகங்களை பற்றி நாங்கள் ஆலோசித்தோம்.
 
அதில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். திமுக அதை புரிந்து கொண்டு எங்களை விட்டு இருக்க வேண்டும். ஆனால் பல விதமாக நெருக்கடி கொடுத்து, ஆசை வார்த்தை காட்டி மதிமுக வினரை அவர்கள் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். இதன் பின்னனியில் ஸ்டாலின் இருக்கிறார். 
 
பணபலத்திலும், ஆள் பலத்திலும் நாங்கள் திமுக விற்கு சமமானவர்கள் இல்லைதான். ஆனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். திமுகவின் நிலைப்பாட்டை மக்கள் முன் வெளிப்படுத்துவோம். இளைஞர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
 
மக்கள் நலக் கூட்டணியில் எங்களுக்குள் நல்ல நம்பகத்தன்மை உள்ளது. எந்த ஈகோவும் கிடையாது. நான் நடத்திய பல போராட்டங்கள் மக்களின் நன்மைக்காகவே. அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்கள் என்பதற்காக இல்லை. அவர்களுக்காக போராடிய ஆத்ம திருப்தியே எனக்கு போதும்” என்று வைகோ கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :